திருச்செந்தூரில் மீண்டும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: பக்தர்கள் கவனமுடன் புனித நீராட அறிவுறுத்தல்
|திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெல்லி மீன்கள் அதிகளவு கரை ஒதுங்கின. இந்த வகை மீன்கள் உடலில் பட்டால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு தீக்காயம் போல் மாறிவிடுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்புடன் நீராட கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தது. இதுகுறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், அதற்குரிய மருந்துகளும் கோவில் முதலுதவி மையத்தில் இருப்பு வைக்கப்பட்டது. பின்னர் ஜெல்லி மீன்களின் வருகையும் குறைந்து காணப்பட்டது.
இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை 6 மணி முதல் கடற்கரையில் அதிக அளவு ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கின. சுமார் 30-க்கு மேற்பட்ட ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் அங்கு பணியில் இருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக கோவில் நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவில் இணை ஆணையர் கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குனர் புஷ்ரா ஷபனம், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வந்து கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை ஆய்வு செய்தனர். அப்போது மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
"பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வகையான செஞ்சொறி ஜெல்லி மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் நீரின் திசை மாறுபாட்டிற்கு ஏற்ப வருகிறது. இது கொட்டும் தன்மையுடைய ஜெல்லி மீன்களாகும். ஆதலால் நீரில் இருக்கும் போதோ அல்லது கடற்கரை பகுதிகளில் கிடந்தாலோ அவற்றை கையினால் தொடுதல் கூடாது. அவற்றை அறியாமல் தொடுவதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் காந்தலை குறைக்க வினிகரை காயம் ஏற்பட்ட பகுதியில் சுமார் ஒரு நிமிடம் தெளிக்க வேண்டும். பின்னர் கலமைன் அல்லது கலட்ரைல் மருந்தினை உடனடியாக தடவினால் 24 மணி நேரத்திற்குள் காயம் சரியாகிவிடும்."
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வள்ளி கோவில் கடல் பகுதியில் விடப்பட்டன. மேலும் பக்தர்கள் கவனமுடன் புனித நீராட வேண்டும். அதிக நேரம் கடலில் புனித நீராட வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.