குடிமங்கலம் அருகே ஜீப்-கார் நேருக்கு நேர் மோதல் - முதியவர் பலி
|குடிமங்கலம் அருகே ஜீப்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குடிமங்கலம்,
ஒட்டன்சத்திரம் தாலுகா நீலகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது72). இதே பகுதியை சேர்ந்தவர் கன்னிமுத்து மகன் ராமகிருஷ்ணன்(வயது 30).
ராமகிருஷ்ணன் தனது பெரியப்பா பழனிச்சாமியுடன் கிணத்துக்கடவில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு செல்வதற்காக பெரியப்பாவை காரில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி தாராபுரம் ரோட்டில் குடிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தாராபுரத்தில் இருந்து தனியாருக்குச் சொந்தமான ஜீப் வந்து கொண்டிருந்தது.
ஜீப்பை மடத்துக்குளம் தாலுகா பணத்தம்பட்டியை சேர்ந்த பெரியசாமி ஓட்டி வந்தார். குடிமங்கலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.
ஜீப் மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ணனுக்கு லேசான காயமும் அருகிலிருந்த பழனிச்சாமி படுகாயமும் அடைந்தனர். படுகாயமடைந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.