நாமக்கல்
ஜேடர்பாளையத்தில் பரபரப்பு: 100 ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடித்து அகற்றம் மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது
|ஜேடர்பாளையத்தில் 100 ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையத்தில் 100 ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையோர பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் கடைகளை கட்டி வசித்து வருகின்றனர். இதனை அகற்ற கோரி ஜேடர்பாளையத்தை சேர்ந்த பொன்னரசு என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி 2010-ம் ஆண்டு ஜேடர்பாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எனினும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றகோரி மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. அதன்படி உடனடியாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இடித்து அகற்றம்
இதனையடுத்து கடந்த மாதம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில வீடுகள் மட்டும் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை வந்தது. அதில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
கைது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் வீடுகளுக்குள் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்களால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்க நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் (மதுவிலக்கு), பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோர்ட்டு உத்தரவுப்படி 100-க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.