ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
|சட்டசபையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.
சட்டப்பேரவையின் முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மீண்டும் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்றுதாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கைகள் மீது காரசார விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.