ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
|ஜெயக்குமாரிடம் பணிசெய்த ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
நெல்லை,
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார். இவர் கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்து புதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, மாயமான ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் நேற்று முன்தினம் காலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்தது. அவரை யாரேனும் கை-கால்களை கட்டி கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயக்குமாரிடம் பணிசெய்த ஊழியர்கள், தோட்டத்தில் இருந்த பணியாளர்கள் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இன்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.