< Back
மாநில செய்திகள்
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை
மதுரை
மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Jun 2022 2:29 AM IST

சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி புதிய கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை விடுத்தார்.

மதுரை,

சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி புதிய கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வு

மதுரை மாநகராட்சி புதிய கமிஷனராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அன்றைய தினம் அவர், மாநகராட்சி அண்ணா மாளிகை முழுவதும் ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு துறையாக சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக நேற்று மாநகராட்சி செல்லூர் லாரி நிலையத்திற்கு சென்றார். டீசல் நிலையம், பேட்டரி வாகனங்கள், பதிவேடுகள், ஆன்லைன் மூலம் வாகனங்களை கண்காணிக்கும் ஜி.பி.ஆர்.எஸ்.முறை செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அதன்பின் கமிஷனர், நான்கு மாசி வீதிகளில் தேங்கியுள்ள குப்பைகள், மண்கூட்டும் வாகனம் மூலம் தெருக்களை தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அண்ணா மாளிகையில் கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். முல்லை பெரியாறு அணையில் குடிநீர் எடுக்கும் திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும். மதுரை மாநகராட்சி வடக்கு பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டம் விரைவாக செய்து முடிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பங்களிப்போடு மதுரை நகரம் அழகுப்படுத்தப்படும்.

ஜப்தி நடவடிக்கை

மாநகராட்சியின் வருவாயை பெருக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து வரி வசூலிக்கப்படும். உரிய முறையில் சொத்து வரி செலுத்தாவிட்டால் சென்னையை போல் மதுரையிலும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் பாதுக்காக்கப்படும். அவர்களின் பிரச்சினைகளை களைவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும். வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் முறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்