ஜம்மு- காஷ்மீர் வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்- திருமாவளவன்
|காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
ஜம்மு-காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு அரசாங்கத்தின் அதிகாரத்துவ செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
மாநிலங்களுடைய உரிமைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு கூட்டாட்சி முறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் இந்தத் தீர்ப்பு அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.
ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்பதைப் பற்றிய முக்கியமான சட்ட வினாவுக்கு உச்ச நீதிமன்றம் விடை அளிக்கவில்லை. மாறாக, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் என்று கூறியிருப்பது மிகப்பெரிய முரண்பாடாகும் .
ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிக்கான மாநில அந்தஸ்து கூடிய விரைவில் மீட்கப்படும் என ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மாநிலத்தை உடைத்து லடாக் என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்கிய பிறகு மாநில அந்தஸ்தை மீட்பதாகச் சொல்வது ஏமாற்று வேலையே தவிர வேறல்ல.
அங்கு தேர்தல் நடத்த 2024 செப்டம்பர் 30 வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். கடந்த 5 ஆண்டுகளாகவே தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் அங்கு, தேர்தலை நடத்துவதற்கு ஏன் இவ்வளவு கால இடைவெளி தர வேண்டும் எனத் தெரியவில்லை.
அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஒன்றிய பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு மட்டும்தான் தீங்கிழைத்தது. இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த கூட்டாட்சி முறைக்கும் உச்சநீதிமன்றம் ஊறு விளைவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதியாகும்.'
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.