< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில்  ஜமாபந்தியில் 96 மனுக்கள் பெறப்பட்டன  பரமத்திவேலூரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பங்கேற்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தியில் 96 மனுக்கள் பெறப்பட்டன பரமத்திவேலூரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பங்கேற்பு

தினத்தந்தி
|
25 May 2022 4:23 PM GMT

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 96 மனுக்கள் பெறப்பட்டன. பரமத்திவேலூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 96 மனுக்கள் பெறப்பட்டன. பரமத்திவேலூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டார்.

கலெக்டர்

பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதையடுத்து சிறுநல்லிக்கோவில், பெருங்குறிச்சி, தேவனம்பாளையம், சுள்ளிப்பாளையம், குப்பிரிக்காபாளையம், குரும்பலமகாதேவி, சோழசிராமணி, பெரியசோளிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 36 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, கிராம பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார். இதில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

முதல்நாளான நேற்று செல்லப்பம்பட்டி, களங்காணி, ஏளூர், தளாம்பாடி, தத்தாத்திரிபுரம், கரடிப்பட்டி, உடுப்பம், மின்னாம்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. இதில் பட்டா மாறுதல், உட்பிரிவு, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 34 மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் திருமுருகன், சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் தமிழ்மணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மோகனூர்

மோகனூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. ஆரியூர், பேட்டப்பாளையம், மோகனூர், ராசிபாளையம், ஒருவந்தூர், குமரிபாளையம், அரசநத்தம் மற்றும் வளையப்பட்டி உள்ளிட்ட வருவாய் கிராமத்திற்கு நடந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, கணினி திருத்தம், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து 26 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மற்ற கிராமங்களுக்கு வருகிற ஜூன் 1 ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதில் மோகனூர் தாசில்தார் தங்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பச்சைமுத்து, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்