வேலூர்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 24-ந் தேதி தொடக்கம்
|தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 24-ந் தேதி தொடங்குகிறது.
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 24-ந் தேதி தொடங்குகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் நடைபெற உள்ளது. வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்திக்கு கலெக்டரும், கே.வி.குப்பம் தாலுகாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலரும், காட்பாடி தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரும், அணைக்கட்டு தாலுகாவிற்கு வேலூர் வருவாய் கோட்ட அலுவலரும், குடியாத்தம் தாலுகாவிற்கு குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலரும், பேரணாம்பட்டு தாலுகாவிற்கு வேலூர் தனித்துணை கலெக்டரும் (சமூக பாதுகாப்பு திட்டம்) தீர்வாய அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், நிலவரி கணக்குகள், பட்டாமாற்றம், பட்டாநகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின் கீழ் நிதி உதவிகோருதல் மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படும். ஒரு கிராமத்துக்கு சம்பந்தப்பட்ட மனுக்கள் அந்த கிராம கணக்குகளின் தணிக்கை நாளில் தான் கொடுக்க வேண்டும். தணிக்கை நாட்களுக்கு முன்னதாக கொடுக்கப்படும் மனுக்கள் அதற்குரிய கிராம தணிக்கை நாட்களில்தான் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.