திருவள்ளூர்
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
|திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா தலைமையில் நடைபெற்று வருகிறது.
3-ம் நாள் கூட்டத்தில் திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், அகூர், அமிர்தாபுரம், பெரியகடம்பூர், சின்னகடம்பூர் கார்த்திகேயபுரம், திருத்தணி போன்ற கிராமங்களை சேர்ந்த வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்.டி.ஒ. தீபாவிடம் வழங்கினர்.
ஆர்.டி.ஒ. தீபாவிடம் கார்த்திகேயபுரம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கார்த்திகேயபுரம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் சர்வே எண் 385-ல் 4.50 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக சுடுகாடு, கங்கை அம்மன் கோவில், மஞ்சுவிரட்டும் இடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1988-ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் பெறாமல் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கத்திற்கு மேற்கண்ட இடத்தில் வருவாய்த்துறை மூலம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். இது நாள் வரை அங்கு ஒரு குடியிருப்பு கூட ஏற்படவில்லை. ஊராட்சி சார்பில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியும் இடம் மீட்கப்படவில்லை. எனவே வருவாய் ஆர்.டி.ஓ., தலையிட்டு 4.50 ஏக்கர் அரசு நிலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஒ. தீபா நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.