தர்மபுரி
ஜமாபந்தியில் 160 மனுக்களுக்கு தீர்வு
|பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் பகுதிகளில் நடந்த ஜமாபந்தியில் 160 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
ஜமாபந்தி
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கடந்த 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருவாய் தீர்வாய கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நடந்தது. இதில் 45 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா-சிட்டா மாற்றம், சாதி சான்று, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 920 மனுக்கள் அளித்தனர்.
இதில் 46 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி, தீர்வு காண அரூர் உதவி கலெக்டர் ராஜசேகரன் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்பிரமணி, தனி தாசில்தார்கள் கனிமொழி, மில்லர், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனிசாமி, துணை தாசில்தார்கள் கம்ரூதீன், சேரன் மற்றும் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவி
பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 4 நாட்கள் நடந்தது. இதில் மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நில உரிமை சம்பந்தமான 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து உதவி கலெக்டர் நஜீரி இக்பால் 70 பயனாளிகளுக்கு நிலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தாசில்தார் ராஜா, வட்ட வழங்கல் அலுவலர் பழனி, துணை தாசில்தார்கள் சிவக்குமார், சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர்கள் ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், சத்யா, முருகேசன், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரூரில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 769 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் பெருமாள், தனி தாசில்தார் செல்வராஜ், துணை தாசில்தார் சின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.