நாமக்கல்
மாவட்டத்தில் 8 இடங்களில் ஜமாபந்தி தொடங்கியது
|நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் ஜமாபந்தி தொடங்கியது. சேந்தமங்கலம் தாலுகாவில் கலெக்டர் உமா பங்கேற்றார்.
சேந்தமங்கலம்
ஜமாபந்தி தொடங்கியது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார் அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதையொட்டி சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. அதில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி, சேந்தமங்கலம் பிர்காவுக்கு உட்பட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது காந்திபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளரான பொன்னையன், தனக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அது குறித்து தெரிவித்து அவருக்கு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பெரிய குளம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், ஊராட்சியில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். அதற்கு சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை அழைத்து சேதமான சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை, பட்டா மாறுதல், பரப்பு திருத்தம் உள்பட உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 62 மனுக்களை கொடுத்தனர். அவற்றின் மீது தீர்வு காண சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் ஏற்பாடு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தாலுகா வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணி, மண்டல துணை தாசில்தார் மதன் குமார் உள்பட வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
உதவி கலெக்டர்
நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முதல்நாளான நேற்று செல்லப்பம்பட்டி, களங்காணி, ஏளூர், தாளம்பாடி, தத்தாத்திரிபுரம், கரடிப்பட்டி, உடுப்பம், மின்னாம்பள்ளி, பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 33 மனுக்களை கொடுத்தனர். இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சக்திவேல், மண்டல துணை தாசில்தார் மோகனா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. நிலஅளவை தொடர்பான உபகரணங்களையும் துணை கலெக்டர் பிரபாகரன் பார்வையிட்டார்.