புதுக்கோட்டை
ஜல்லிக்கட்டு காளை முட்டி பெண் பலி
|ஜல்லிக்கட்டு காளை முட்டி பெண் பலியானார்.
அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் முருகையா. இவரது மனைவி சிட்டுப்பிள்ளை (வயது 60). இவர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதனை தினமும் வீட்டில் இருந்து மேய்ச்சலுக்காக வெளியில் அவிழ்த்து சென்று மேய்த்து வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிட்டுப்பிள்ளை வழக்கம் போல் ஆடு, மாடுகளை வீட்டில் இருந்து மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு அவிழ்த்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிட்டுப்பிள்ளை வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை அவரை முட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைத்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிட்டுப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்த்த காளை முட்டி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.