சேலம்
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை
|மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய பெரம்பலூரை சேர்ந்த 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்,
மணல் கடத்தல்
கெங்கவல்லி அருகே ஓடும் சுவேதா ஆற்றில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி மணல் கடத்தப்படுவதாக அப்போதைய கவர்ப்பனை கிராம நிர்வாக அலுவலராக இருந்த விபூசனனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஊழியர்களுடன் அவர் சுவேதா ஆற்றுப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு டிராக்டரில் மணலை கடத்திய 2 பேரை பிடிக்க முயன்றார். அவர்கள் விபூசனனை தாக்கி அவர் மீது டிராக்டரை மோதி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் விபூசனன் படுகாயம் அடைந்தார்.
சிறை தண்டனை
இது குறித்து அவர் வீரகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 43), சுரேஷ் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சின்னசாமி, சுரேஷ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.