மதுரை
சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காததால் சிறையில் அடைப்பு: பழிவாங்க ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்
|சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்ததால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர், அதற்கு பழிவாங்குவதற்காக ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்ததால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர், அதற்கு பழிவாங்குவதற்காக ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைப்பு
மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக அவனியாபுரம் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 24) பணியாற்றி வருகிறார்.
6 மாதங்களுக்கு முன்பு கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவருடைய மகன் ரத்தினகுமார் (வயது 23) அந்த ஓட்டலுக்கு வந்துள்ளார். சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்கவில்லையாம். இது குறித்து ஓட்டலில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் கேட்டபோது அவர்களுடன் ரத்தினகுமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஜனார்த்தனன் அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே அவர் மீது கீரைத்துறை போலீசில் வழக்குகள் உள்ளன.
பெட்ரோல் குண்டு வீச்சு
பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவர்களை பழிவாங்க திட்டம் தீட்டினார்.
சம்பவத்தன்று ரத்தினகுமார் நண்பர்களுடன் மீண்டும் அதே ஓட்டலுக்கு மது போதையில் சாப்பிட வந்தார். இரவு 11 மணி என்பதால் ஓட்டலை மூடி கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தங்களுக்கு சாப்பாடு கேட்டு கடைக்காரர்களுடன் தகராறு செய்தனர்.
பின்னர் ரத்தினகுமார் ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த பாட்டிலில் தீயை பற்ற வைத்து கடையில் வீசினார்.
அது பெட்ரோல் குண்டு என்பதால், கடையின் முன்சுவரில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் பாதிப்பு ஏற்படவில்லை. தீயை அணைத்துவிட்டனர். அதற்குள் ரத்தினகுமார் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கடை மேலாளர் அருண்குமார், அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
மீண்டும் கைது
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரத்தினகுமார்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர்.
மேலும் அவருடன் வந்த மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.