தர்மபுரி
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய 3 பெண்களுக்கு ஜெயில்
|ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
9 பவுன் நகை பறிப்பு
பெங்களூருவைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவருடைய மனைவி வள்ளி வினோதினி (வயது 28). இவர் கடந்த 2022- ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூருக்கு புறப்பட்டார்.இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையம் வந்தபோது 3 பெண்கள் அவருடைய இருக்கையின் எதிரே அமர்ந்தனர்.
இந்த ரெயில் தர்மபுரி ரெயில் நிலையம் அருகே வந்தபோது வள்ளி வினோதினி பையில் வைத்திருந்த 9 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது பற்றி தர்மபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 ஆண்டு ஜெயில்
சம்பவம் நடந்த நாளில் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வள்ளி வினோதினியின் அருகே அமர்ந்து பயணம் செய்த 3 பெண்கள் நகை திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்கள் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கவிதா (28), சத்யா (26), திருச்சியை சேர்ந்த வெண்ணிலா (48) என்பது தெரிந்தது. இது தொடர்பாக தேடும் பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார் மேற்கண்ட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது 3 பேரும் ஓடும் ரெயிலில் நகை திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து 3 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1- ல் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மேற்கண்ட 3 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.