< Back
மாநில செய்திகள்
அரூர் அருகேமனைவியை தீ வைத்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூர் அருகேமனைவியை தீ வைத்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
7 April 2023 12:30 AM IST

அரூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

குடும்ப தகராறு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சென்னையன் (வயது 33). இவருடைய மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஆஷா சென்றார். அவரை சமாதானப்படுத்துவது போல் பேசுவதற்காக சென்னையன் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந்தேதி அங்கு சென்றார். பெற்றோர் வீட்டில் இருந்த ஆஷாவை அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

தீ வைத்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த சென்னையன் திடீரென மண்எண்ணெயை ஆஷாவின் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்த ஆஷாவை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆஷா உயிரிழந்தார். இதுதொடர்பாக அரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சென்னையனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் சென்னையன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனால் சென்னையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்க்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்