புதுக்கோட்டை
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தனித்து தான் போட்டியிடுவார்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகவல்
|வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தனித்து தான் போட்டியிடுவார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் கலெக்டர் வர பிரசாத ராவ். இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கூடூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க புதுக்கோட்டை வந்த வர பிரசாத ராவ், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் மெர்சி ரம்யாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் அவர் கடந்த 1994-1996-ம் ஆண்டுகளில் புதுக்கோட்டையில் பணியாற்றிய காலங்களை நினைவு கூர்ந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகம் பெரியார் பிறந்த மண். இங்கு சுயமரியாதை, பாரம்பரியம் ஆகியவை பொதுமக்களுக்கு உண்டு. திருப்பதியில் வனத்துறையினர் வனத்தை பாதுகாத்து வந்தாலும், அதிக மக்கள் தொகையால் வனப்பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால் தான் வனத்தில் இருக்கக்கூடிய சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியே வந்து பொதுமக்களை துன்புறுத்துகின்றன. வனப்பகுதியை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி யாருடனும் கூட்டணி சேராமல் தனித்து தான் போட்டியிடுவார். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரோடு பணியாற்றி பல்வேறு பணிகளை செய்து அவர்களுடைய பாராட்டை பெற்றுள்ளேன்'' என்றார்.