< Back
மாநில செய்திகள்
ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு... ஐகோர்ட் அதிரடி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு... ஐகோர்ட் அதிரடி

தினத்தந்தி
|
22 July 2024 9:58 PM GMT

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

சென்னை,

ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்தியதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9-ந்தேதியன்று கைது செய்தனர்.

பின்னர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரை கைது செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜாபர் சாதிக் வழக்கு தொடர்ந்தார். அதில் 'இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்தது செல்லாது என அறிவித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ், 'போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை. அதன்பிறகு சிறை மாற்று வாரண்ட் உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்' என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாபர் சாதிக் தரப்பு மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், 'போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வரவிருந்த நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமல்ல சிறை மாற்று வாரண்ட் காலாவதியாகி விட்டது. அவ்வாறு காலாவதியான சிறை மாற்ற வாரண்ட் மூலம் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது செல்லாது'' என்று வாதிட்டார்.

இதையடுத்து ஜாபர் சாதிக்கின் மனு குறித்து அமலாக்கத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே ஜாபர் சாதி்க்கை ஆஜர்படுத்தக்கோரி அவரது தந்தை அப்துல் ரகுமான் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கும் அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த வழக்கையும் 31-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்