திண்டுக்கல்
குப்பைக்கிடங்காக மாறிய இடும்பன்குளம்
|பழனியில் குப்பைக்கிடங்காக மாறிய இடும்பன்குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழனி இடும்பன்குளம்
பழனி சிவகிரிப்பட்டியில், பைபாஸ் சாலையில் இடும்பன் கோவில் மற்றும் இடும்பன்குளம் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடும்பன் கோவிலுக்கு பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பாதயாத்திரை வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இடும்பன்குளத்தில் புனித நீராடி இடும்பனை வழிபட்ட பின்பே பழனி கோவிலுக்கு செல்கின்றனர்.
இதனால் பழனி இடும்பன்குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறை, ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தடுப்பு கம்பி மற்றும் இடும்பன்குளத்து பகுதியில் உடைமாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடும்பன்குளத்துக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் தற்போது வறண்டு காணப்படுகிறது.
மாசடைந்த நீர், குப்பை
இந்தநிலையில் இடும்பன்குளம் மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. அதேபோல் படித்துறை மற்றும் உடைமாற்றும் அறை பகுதி மதுபிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் புனிதமிக்க குளம், தற்போது குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் விரைவில் குளத்துக்கு நீர்வரத்து இருக்கும். குளம் நிரம்பியதும் பக்தர்கள் அதில் புனித நீராடுவார்கள். எனவே அதற்கு முன்னதாக இடும்பன்குளத்தில் தேங்கிய கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இடும்பன்குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பழைய துணிகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குளத்தின் ஓரத்தில் பச்சை பாசி படர்ந்த நிலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதோடு படித்துறை பகுதியில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடக்கிறது. இது குளிக்க வரும் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
தூய்மைப்படுத்த வேண்டும்
தற்போது பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இடும்பன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கி குளம் நிரம்பும். பழனியில் கார்த்திகை சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து இடும்பன்குளத்தில் நீராடுவார்கள். எனவே நீர்வரத்து ஏற்படும் முன்பே குப்பைக்கிடங்காக காட்சியளிக்கும் இடும்பன்குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். குளத்தில் தேங்கிய கழிவுநீர், குப்பைகளை அகற்ற வேண்டும். படித்துறை பகுதியில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.