திருவள்ளூர்
ஐ.டி.ஐ. நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
|ஐ.டி.ஐ. நேரடி மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2023-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு (அம்பத்தூர், அம்பத்தூர் (மகளிர்), வடகரை) மற்றும் கும்மிடிப்பூண்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர்களுக்கு இம்மாதம் 23-ஆம் தேதி வரை சேர்க்கைக்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் செயற்கைக்கான வயது வரம்பு 14 முதல் 40 வரையும், மாணவிகளின் சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. மேலும் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அந்தந்த அரசினர் தொழில் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் சேர்க்கைக்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வருகிற 23.09.2023-க்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.