புயல் முழுமையாக கரையைக் கடக்க 2 மணி நேரமாகும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
|மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 மணி நேரத்திற்கு தொடரும் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 மணி நேரத்திற்கு தொடரும் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ தொலைவில் நெருங்கி வந்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 50 கி.மீ தொலைவிலும் நெருங்கியுள்ளது. புயல் அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்திற்குள் கரையை முழுமையாக கடந்து விடும். புயல் கரையை கடந்தாலும் காலை வரை மழை நீடிக்கும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். நுங்கம்பாக்கத்தில் 70 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. செங்கல்பட்டில் 2 மணி நேரத்தில் 13.13 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது" என்று அவர் கூறினார்.
மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது. சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மாண்டஸ் புயலால் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.