< Back
மாநில செய்திகள்
மின்வாரியம் பெயரை பயன்படுத்தி அனுப்பப்படும்மோசடி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்:அதிகாரி எச்சரிக்கை
தேனி
மாநில செய்திகள்

மின்வாரியம் பெயரை பயன்படுத்தி அனுப்பப்படும்'மோசடி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்':அதிகாரி எச்சரிக்கை

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

மின்வாரியம் பெயரில் அனுப்பப்படும் மோசடியான குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.


மின் கணக்கீடு

தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி வட்டத்திற்குட்பட்ட மின்இணைப்புகளுக்கு வாரிய பணியாளர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கணக்கீடு செய்யப்படும் மின் இணைப்புகளின் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் பற்றிய விவரங்கள் நுகர்வோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.

அந்த குறுஞ்செய்திகளில் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண், செலுத்த வேண்டிய தொகை மற்றும் கடைசி நாள் விவரங்கள் மட்டுமே இடம்பெறும். கட்டணம் தொடர்பாக மின்வாரிய அலுவலர்களையோ, பொறியாளர்களையோ தொடர்பு கொள்ளுங்கள் என்று எவ்வித செய்தியும் இடம் பெறாது.

மோசடி குறுஞ்செய்தி

தற்போது பல மின் நுகர்வோர்களுக்கு, 'தங்களது மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிப்பு செய்யப்பட உள்ளது. துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் பெறப்படுகின்றன. இது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். மின்வாரியம் இதுபோன்ற குறுஞ்செய்திகளை எப்போதும் அனுப்புவதில்லை. எனவே இதுபோன்ற குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

மின்பயன்பாட்டு கட்டணத்தை இணையவழியிலும், மின்வாரிய செயலி, தபால் அலுவலகம் மூலமாகவும் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இவ்வசதிகளை பயன்படுத்தி உரிய காலத்தில் பணம் செலுத்தி இதுபோன்ற மோசடிகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்