மதுரை
கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க.தான்
|கச்சத்தீவை தாரை வார்த்ததே தி.மு.க. தான். தற்போது அதை மீட்போம் என மு.க.ஸ்டாலின் வீரவசனம் பேசி மக்களை ஏமாற்றுகிறார் என எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டில் கூறினார்.
மதுரை
கச்சத்தீவை தாரை வார்த்ததே தி.மு.க. தான். தற்போது அதை மீட்போம் என மு.க.ஸ்டாலின் வீரவசனம் பேசி மக்களை ஏமாற்றுகிறார் என எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டில் கூறினார்.
கச்சத்தீவு
மதுரை அ.தி.மு.க. மாநில மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கடந்த 18-ந் தேதி ராமேசுவரத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கச்சத்தீவை மீட்போம் என்று பொய் பேசி இருக்கிறார். கச்சத்தீவை தாரை வார்த்ததே தி.மு.க. தான். ஆனால் இப்போது முதல்-அமைச்சர் வீரவசனம் பேசுகிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு போட்டார். அதற்கு மத்திய-மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி பதில் மனு தாக்கல் செய்யாமல் மீனவர்களை வஞ்சித்து வந்தார். மத்திய அரசு, இனி கச்சத்தீவை மீட்க முடியாது. இலங்கைக்கு கொடுத்தது, கொடுத்தது தான் என்று மனு தாக்கல் செய்தது. அதே மனுவைதான் கருணாநிதி மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்தார்.
அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். தொடர்ந்து அ.தி.மு.க. தான் கச்சத்தீவை மீட்க சட்டப்போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறது. 13 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க.விற்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற ஞாபகம் வரவில்லை. ஆனால் இப்போது திடீரென்று நினைவு வந்து இருக்கிறது. தி.மு.க. ஒரு மக்கள் விரோத ஆட்சி. தி.மு.க. ஆட்சி எப்போது அகலும் என்று தமிழக மக்கள் ஒரே குரலில் கேள்வி எழுப்பி கொண்டு இருக்கிறார்கள். இந்த வேளையில் மக்களை திசை திருப்பவும், மீனவர்கள் மத்தியில் கச்சத்தீவை மீட்போம் என்று மு.க.ஸ்டாலின் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது அ.தி.மு.க. தான். சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி தான் அ.தி.மு.க. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை, கோவை ஆகிய நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என விருது வாங்கினோம்.
ஊழல் ஆட்சி
நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இவர்கள் எல்லாம் ஊழல் வழக்குகளில் வாய்தா வாங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் வழக்குகளை விரைவாக முடித்து விட்டு விடுதலையாக பார்க்கிறார்கள். இதுவரை 3 அமைச்சர்கள் விடுதலையாகி விட்டனர். அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்தது தவறு என்று உயர்நீதிமன்றம் கூறி தானாக வழக்கு போட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் சும்மா விடமாட்டோம். சுப்ரீம் கோர்ட்டு வரை செல்வோம். அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். உங்கள் கட்சியை(தி.மு.க.) நீங்கள் (மு.க.ஸ்டாலின்) காப்பாற்றி கொள்ளுங்கள்.
டாஸ்மாக்கில் மிகப்பெரும் ஊழல் நடக்கிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோடி விற்பனை ஆகிறது. அதன் மூலம் மட்டுமே தினமும் ரூ.10 கோடி ஊழல் நடக்கிறது. 3 ஆயிரத்து 600 பார்கள் முறைகேடாக நடக்கிறது. இந்த பார்கள் மூலம் கிடைக்கும் ஊழல் பணம் மேலிடமான ஸ்டாலினுக்கு செல்கிறது என்கிறார்கள். முறைகேடான பார்களில் விற்கப்படும் மது பானங்களுக்கு கலால் வரி செலுத்துவதில்லை. சாராய ஆலையில் இருந்து நேரடியாக பார்களில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஊழல், விரைவில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.
எந்த கட்சியிலும் கிடையாது
தற்போது தி.மு.க. அரசு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். அதற்கு எல்லாம் அச்சப்பட மாட்டேன். அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம். நான் ஒரு சாதாரண தொண்டன். அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். வேறு எந்த கட்சியிலும் இது போன்று கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.