< Back
மாநில செய்திகள்
கடலூரில் 101.84 டிகிரி வெயில் கொளுத்தியது
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில் 101.84 டிகிரி வெயில் கொளுத்தியது

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

கோடை முடிந்தும் சூரியன் சுட்டெரித்து வருவதால், கடலூரில் 101.84 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

வெயில்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இடையில் வெப்பச்சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. அதன்பிறகு மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

அதாவது கோடை காலத்தை மிஞ்சும் வகையில் சூரியன் சுட்டெரித்து வருகிறது. கடலூரில் நேற்று 101.84 டிகிரி வெயில் பதிவானது. இதை காலை முதலே உணர முடிந்தது. காலை 7 மணிக்கே சூரியன் தன்னுடைய கொடூர முகத்தை காட்ட தொடங்கி விட்டது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் உக்கிரம் காணப்பட்டது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் முகத்தை துணியால் மூடியபடி சென்றனர்.

அனல் காற்று

வீடுகளில் மின்விசிறியை சுழல விட்டால் அனல் காற்று தான் வீசியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டனர். வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க இளநீர், பழச்சாறு கடைகளை நாடிச்சென்றனர். கோடை காலத்தை விட தற்போது இளநீர் மற்றும் பழச்சாறு கடைகள் அதிகமாகி விட்டது. அவற்றில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த வெயிலின் தாக்கம் குறித்து கடலூர் வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலமுருகனிடம் கேட்டபோது, மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அரபிக்கடல் பகுதியில் காற்றின் திசை வேறுபாடு ஏற்பட்டால் கேரளாவில் மழை பெய்யும், அந்த மழை தமிழகத்திலும் பெய்ய தொடங்கும். அப்போது தான் வெயில் குறையும். அது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்