புதுக்கோட்டை
''வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயமாக்க கூடாது''-விளக்க கூட்டத்தில் கட்சியினர் வலியுறுத்தல்
|வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயமாக்க கூடாது என புதுக்கோட்டையில் நடைபெற்ற விளக்க கூட்டத்தில் கட்சியினர் வலியுறுத்தினர்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் பேசுகையில், ''வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.
வாக்காளரிடம் ஆதார் எண் இல்லை அல்லது ஆதார் எண் கொடுக்க விருப்பம் இல்லாவிடில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, வங்கி, தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), பாஸ்போர்ட் உள்பட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து இணைக்கலாம்'' என்றார்.
வரவேற்பும், எதிர்ப்பும்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பிற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர், பா.ஜனதாவை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இப்ராகிம்பாபு பேசுகையில், ''நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் எண் வினியோகிக்கப்பட்டுவிட்டது என இதுவரை உறுதியாகவில்லை. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயமாக்க கூடாது.
தேர்தல் நேரத்தில் ஆதார் எண் இணைக்காதவர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் உள்ளது. அதனால் எதிர்க்கிறோம்'' என்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி ஆகியோர் ஆதார் இணைப்பை கட்டாயமாக்க கூடாது என்றனர்.
பட்டியலில் குளறுபடி
தி.மு.க. சார்பில் நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை முதலில் சரி செய்ய வேண்டும். இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த செந்தில், 'ஆதார் எண்ணை இணைப்பது மக்களுக்கு கூடுதல் சுமை தான். எல்லா விவரங்களும் அரசிடம் இருக்கிற நிலையில், அரசே இதனை மேற்கொள்ளலாம். எதற்காக ஆதார் எண் இணைக்கப்படுகிறது என தெளிவான நிலை இல்லை' என்றார்.
கருத்துகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 2 நிர்வாகிகள் உள்பட அரசியல் கட்சி நிா்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.