மதுரை
தகுதி படைத்த பெண்களுக்குதான் ரூ.1000 என்று தேர்தலுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும்-தி.மு.க. மீது ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
|தி.மு.க.விற்கு இரட்டை நாக்கு உள்ளது. தகுதி படைத்த பெண்களுக்கு தான் ரூ.1000 என்று தேர்தலுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தி.மு.க.விற்கு இரட்டை நாக்கு உள்ளது. தகுதி படைத்த பெண்களுக்கு தான் ரூ.1000 என்று தேர்தலுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சிம்ம சொப்பனம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, மதுரை மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. குமாரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில், ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மட்டும் இல்லையென்றால் சில துரோகிகள் ஸ்டாலின் காலடியில் அ.தி.மு.க.வை அடகு வைத்து இருப்பார்கள். தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மக்கள் குறைகளை, துன்பங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்புகள் சட்டமன்றத்தில் மறுக்கப்படுகிறது.
கடன் தொகை
அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கும் போது சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்களுக்கு 2 மணி நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க உறுப்பினருக்கு 2 நிமிடம் கூட பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.மக்கள் வரிப்பணம் மூலம் இயங்கும் சட்டமன்றம் பஜனை மடமாக மாறி போய் விட்டது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோருக்கு தி.மு.க. மூத்த அமைச்சர்கள் முதல் தி.மு.க. உறுப்பினர்கள் வரை, புகழ் பாடும் மன்றமாக தான் சட்டசபை உள்ளது. இதற்கு சட்டமன்றம் எதற்கு? அண்ணா அறிவாலயத்திலேயே நடத்திக் கொள்ளலாமே?
தேர்தல் அறிக்கையில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஏன் தேர்தல் அறிக்கையிலேயே தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தால் உங்கள் தகுதி என்ன என்பதை அப்போதே தேர்தலில் மக்கள் காட்டியிருப்பார்கள். ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சும் என்று இரட்டை நாக்குடன் தி.மு.க. பேசி வருகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமெரிக்காவிற்கே நிதிநிலையை தாக்கல் செய்ய தகுதி படைத்தவர் என்று கூறுகிறார்கள்.ஆனால் தமிழக மக்களின் நாடி துடிப்பை, ஏழ்மையை, வறுமையை அவர் அறியவில்லை.கடன் பெறமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் இரண்டே ஆண்டில் ஒன்றரை லட்சம் கோடி கடனை தமிழகத்திற்கு பெற்றுவிட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.