< Back
மாநில செய்திகள்
குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம்

தினத்தந்தி
|
12 Sep 2023 6:45 PM GMT

திருமருகலில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டச்சேரி:

திருமருகலில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாயில் உடைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாய்கள் மூலம் நாகை மாவட்டம் திருமருகல் அருகே நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. இதில் இருந்து ராட்சத குழாய் மூலமாக திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரடி அருகில் 2 இடங்களிலும், தெற்கு வீதியில் 1 இடத்திலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்கள் ஆகிறது.

வீணாகி சாலையில் செல்கிறது

அதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இது வரை சரி செய்யாததால் தினமும் குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. மேலும் இரவு நேரத்தில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பெறும் மருங்கூர், நெய்குப்பை, வேளங்குடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

சரிசெய்ய வேண்டும்

மேலும் சாலையோரம் வீணாகும் குடிநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் ஆதாரமாக

இதுகுறித்து மருங்கூர் பகுதியை சேர்ந்த சந்தர் கூறுகையில், மருங்கூர் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் முக்கிய குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீரை நம்பி வாழ்கிறோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் சாலையிலும், வாய்க்காலிலும் ஓடி வீணாகிறது. இதனால் கடந்த சில வாரமாக குடிப்பதற்கு போதிய தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து குடிநீர் வாரியத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும் செய்திகள்