தஞ்சாவூர்
ஷட்டர்களை மூட முடியாததால் கடைகளை மது அருந்தும் பாராக பயன்படுத்தும் அவலம்
|ஷட்டர்களை மூட முடியாததால் கடைகளை மது அருந்தும் பாராக பயன்படுத்தும் அவலம்
தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் ஷட்டர்களை மூட முடியாததால் சில கடைகளை மது அருந்தும் பாராக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது எனவும், தரைதளத்தில் கழிவறை வசதி செய்ய வேண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
சரபோஜி மார்க்கெட்
தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பஸ் நிலையம் சீரமைப்பு, பூங்காக்கள் மேம்பாடு, குடிநீர் மேம்பாட்டு பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாநகரில் காமராஜர் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட் என 2 மார்க்கெட்டுகள் உள்ளன. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் காமராஜர் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட் ஆகிய 2 மார்க்கெட்டுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட கடைகள்
அதன்படி 2 மார்க்கெட்டுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இந்த 2 மார்க்கெட்டுகளில் தஞ்சை கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த சரபோஜி மார்க்கெட் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 26 நாட்டு மருந்து கடைகள், 16 அரிசி கடைகள், 120 மளிகைக்கடைகள், எண்ணெய், காய்கறி கடைகள் என 350 கடைகள் இருந்தன. இந்த கடைகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 308 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 6 கடைகள் மாநகராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
மீதுமுள்ள 302 கடைகள் ஏலம் விடப்பட்டன. இவற்றில் ஏலம் எடுத்த பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரத்தை தொடங்கிவிட்டனர். பல கடைகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. சில கடைகளை தங்களுக்கு தகுந்தார்போல் வியாபாரிகள் மாற்றி அமைத்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட சில கடைகளில் ஷட்டர்களை மூட முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த கடைகள் எல்லாம் முழுவதும் திறந்த நிலையிலும், பாதிஅளவு திறந்த நிலையிலும் காணப்படுகிறது.
மது அருந்துகின்றனர்
இரவு நேரங்களில் இப்படி திறந்து இருக்கும் கடைகளுக்குள் சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்வதுடன், பிளாஸ்டிக் டம்ளர், திண்பண்டங்களும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. அந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் யார் உள்ளே வருகிறார்கள் என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.
அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. எனவே கடைகளுக்குள் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். மேலும் மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கழிவறை மார்க்கெட்டின் பின்புறமும் மாடி பகுதியில் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிவறையை தேடி மக்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.
தரைதளத்தில் கழிவறை
இதனால் மார்க்கெட்டின் தரைப்பகுதியில் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதுமட்டுமின்றி கடைகளில் பயன்படுத்தக்கூடிய தண்ணீர், மழை தண்ணீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. எனவே இந்த தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மார்க்கெட்டிற்கு வாகனங்கள் வந்து செல்வதற்காக போடப்பட்டுள்ள பாதையின் வழியாக வேகமாக வாகனங்களில் சிலர் வந்து செல்கின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே அந்த பாதையில் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அனைத்து கடைகளையும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாகும்.