< Back
மாநில செய்திகள்
துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது - ஐகோர்ட்டு வேதனை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது - ஐகோர்ட்டு வேதனை

தினத்தந்தி
|
23 April 2024 10:37 PM IST

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அதிகார அமைப்புகளுக்கு இடையில் பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., சார்பில் பிரதிநிதியை சேர்க்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பி.ஜெகந்நாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ''ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை நியமி்த்து கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தன்னை இணைக்கக்கோரி இந்த வழக்கின் மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், "கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது துரதிருஷ்டவசமானது. இதனால் மாணவர்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்படுவது வேதனைக்குரியது. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்சினை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வியின் நிலை குறித்தே நாங்கள் கவலை கொள்கிறோம். மற்ற பிரச்சினைகள் பற்றி அல்ல. பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயலாற்ற வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் விசாரணையை வருகிற ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்