< Back
மாநில செய்திகள்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது  ஈரோடு மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது ஈரோடு மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரிப்பு

தினத்தந்தி
|
23 Sep 2023 10:10 PM GMT

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஈரோடு மஞ்சள் அனுப்பப்படுகிறது. இதனால் மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஈரோடு மஞ்சள் அனுப்பப்படுகிறது. இதனால் மஞ்சள் ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி அதிகம்

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையும், அரசு விடுமுறை நீங்கலாக மார்க்கெட் செயல்படுகிறது.

இந்த மார்க்கெட்டுகளுக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மஞ்சள் கொண்டு வரப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மஞ்சள் வரத்து ஏற்படுகிறது.

புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள் தரமாக இருப்பதால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் மஞ்சளின் ஏற்றுமதி உயர்ந்து உள்ளது. அதாவது நடப்பு நிதி ஆண்டில் கடந்த 6 மாதங்களில் 25 சதவீதம் மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறது.

தேவை அதிகரிப்பு

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

இந்த ஆண்டு வடமாநிலங்களில் பலத்த மழை காரணமாக மஞ்சள் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் அதிகமான மஞ்சள் கொள்முதல் செய்யப்பட்டது.

எனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரத்து 500 வரை விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த மாதம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 400 வரை உயர்ந்தது. இதில் தரமான மஞ்சள் அதிகமாக விற்பனையானது.

கொரோனா தாக்குதலுக்கு பிறகு மஞ்சளின் தேவை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிகரித்து உள்ளது.

புதிதாக பல நாடுகளுக்கும் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மஞ்சளாகவும், மதிப்புகூட்டப்பட்ட பொருளாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதன்படி கடந்த 6 மாதங்களில் 25 சதவீதம் மஞ்சள் ஏற்றுமதி உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்