பா.ஜனதா - ஓ.பன்னீர் செல்வம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி என தகவல்
|பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க.வும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, தே.மு.தி.க.வுக்கு ஐந்து தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பா.ஜனதா கட்சி கூட்டணியில் சரத்குமார், ஏ.சி.எஸ்., ஓ.பன்னீர் செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐ.ஜே.கே., அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் பா.ஜனதா தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. அந்த வகையில், பா.ம.க.வுக்கு 10 தொகுதிகளும் 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகளும், ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதியும், தேவநாதன் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.ஜனதா - ஓ.பன்னீர் செல்வம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் பதில் அளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே பா.ஜனதா - தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.மா.கா 4 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க பா.ஜனதா முன்வந்துள்ளதால் இழுபறி நிலவுவதாக தெரிகிறது.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.