
ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 10ஆம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி்க்கு கடந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து அ.தி. மு.க. கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளை பெற்று தனது டெபாசிட் தொகையை தக்க வைத்து கொண்டார். மீதமுள்ள 75 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10-ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. '
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன், பதவியேற்பு குறித்த தேதியை சட்டப்பேரவைத்தலைவர் உறுதி செய்வார் என்றார்.
மேலும் 34 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் செல்வதை எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவன், அன்றைக்கு ஏசி இல்லை, இன்றைக்கு ஏசி இருக்கிறது என்று நகைச்சுவையுடன் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 18 எம்.எல்.ஏ.களாக உயர்ந்துள்ளது.