'பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவது தவறு இல்லை' - கனிமொழி எம்.பி.
|பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவதில் எந்த தவறும் இல்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவதில் எந்த தவறும் இல்லை என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"பெண்கள் எந்த இடத்தில் பணி செய்தாலும், அவர்கள் அனைத்து விதமான அத்துமீறல்களில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவதில் எந்த தவறும் இல்லை. பெண்கள் பணி செய்யும் இடத்திலும், வாழும் இடத்திலும் பாதுகாப்பு என்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட யாருக்கும் உரிமை இல்லை."
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.