'லட்டு விவகாரத்தை நாட்டின் பொது பிரச்சினையாக கொண்டு செல்வது சரியல்ல' - சீமான்
|லட்டு விவகாரத்தை நாட்டின் பொது பிரச்சினையாக கொண்டு செல்வது சரியல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;-
"லட்டுவை சாப்பிட்டவர்கள் உயிருடன் தானே இருக்கிறார்கள். அதில் எதுவும் பிரச்சினை இல்லையே. இந்த விவகாரத்தை தேசத்தின் பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அதைப் பற்றி பேச மறுக்கிறார்கள்.
லட்டுக்களில் கலப்படம் செய்யப்பட்டிந்தால் அது தவறுதான். அந்த தவறை யார் செய்தார்களோ அவர்களைப் பிடித்து விசாரிக்க வேண்டும். லட்டு தயாரிக்க எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தார்களோ, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். அதை விடுத்து இந்த விவகாரத்தை நாட்டின் பொது பிரச்சினையாக கொண்டு செல்வது சரியல்ல."
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.