பா.ஜ.க. கேட்டதால் மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக கூறுவது பெருமையாகாது - சபாநாயகர் அப்பாவு
|பா.ஜ.க. கேட்டதால் மத்திய அரசு நிதி ஒதுக்கியது என்று கூறுவது பெருமையாகாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை,
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்க தமிழக முதல்-அமைச்சரைப் போல், தமிழக பா.ஜ.க. தலைவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் எனவும், அதனை தொடர்ந்து மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தமிழக பா.ஜ.க. வழிகாட்டு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "முதல்-அமைச்சர் கேட்டார், மத்திய அரசு நிதி கொடுத்தது என்று கூறுவதுதான் பெருமையே தவிர, கிளைச் செயலாளரோ, ஒன்றிய செயலாளரோ அல்லது மாவட்ட செயலாளரோ சொல்லி மத்திய அரசு நிதி கொடுத்தது என்று சொல்வது எந்த வகையிலும் பெருமையாகாது. அரசு சார்ந்த விஷயமாக பிரதமரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அமைச்சரவை கூடி முடிவு எடுத்தது. அதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.