தமிழ்நாட்டில் நூறு சதவீத தாழ்வுதள படிக்கட்டு பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது
|தமிழ்நாட்டில் நூறு சதவீத தாழ்வுதள படிக்கட்டுகள் கொண்ட பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது என்று சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்து 107 பஸ்களை புதிதாக கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. அதன்படி பஸ்களை புதிதாக கொள்முதல் செய்யும்போது, பெங்களூரு போன்ற பிற நகரங்களில் இருப்பதுபோல மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்வகையில் தாழ்வுதள படிக்கட்டுகளை கொண்ட பஸ்களை கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, புதிதாக கொள்முதல் செய்யப்படும். நூறு சதவீத பஸ்களையும் தாழ்வுதள படிக்கட்டுகளை கொண்ட பஸ்களாக கொள்முதல் செய்வதில் என்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
செலவு அதிகம்
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து நிறுவன இயக்குனர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நூறு சதவீதம் தாழ்வுதள பஸ்களை இயக்க வேண்டும் என்றால் அதற்குரிய வகையில் பஸ் நிறுத்தங்களையும், சாலை உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். தாழ்வுதள படிக்கட்டுகள் கொண்ட பஸ்களை இயக்கினால் மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் பஸ்சுக்குள் புகுந்துவிடும். அத்துடன் ஒரு தாழ்வுதள படிக்கட்டு பஸ்சின் விலை ரூ.80 லட்சம் ஆகும். அதை ஒரு கி.மீ. தூரத்துக்கு இயக்க ரூ.41 செலவாகும். ஆனால் சாதாரண பஸ்களை கொள்முதல் செய்யும்போது இதில் பாதி மட்டுமே செலவாகும்.
ஆலோசனை
அத்துடன் தாழ்வுதள படிக்கட்டுகள் கொண்ட பஸ்களை அன்றாடம் முறையாகப் பராமரிக்க தனி வசதிகள் தேவை. இந்த காரணங்களால் நூறு சதவீதம் தாழ்வுதள படிக்கட்டுகள் கொண்ட பஸ்களை இயக்குவது என்பது சாத்தியமற்றது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அதையடுத்து நீதிபதிகள், பஸ்களின் பின்புறத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் பிரத்தியேக சாய்வுதளப் பாதைகள் அமைக்க முடியுமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.