< Back
மாநில செய்திகள்
குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது - ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து
மாநில செய்திகள்

"குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது" - ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

தினத்தந்தி
|
16 Nov 2022 8:12 PM IST

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என ஆட்கொணர்வு மனுவில் மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா என்பவர், தனது இரு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏஸ்.எஸ்.ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் கோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மனுதாரரின் மனு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இருதரப்பினரையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரரின் மைனர் குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என்று தெரிவித்தனர். எனவே மனுதாரருக்கு உரிய நிவாரணத்தை ஆட்கொணர்வு மனு மூலம் தீர்க்க இயலாது என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்