< Back
மாநில செய்திகள்
தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என்பது நியாயமல்ல அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மாநில செய்திகள்

'தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என்பது நியாயமல்ல' அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தினத்தந்தி
|
30 Sept 2023 2:05 AM IST

‘கர்நாடக அணைகளில் தண்ணீ்ர் இருந்தும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என்பது நியாயமில்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை,

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12 ஆயிரத்து 500 கன அடி நீர் தேவை என கேட்டு வருகிறோம். ஆனால், கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வழங்கி உள்ளது.

பயிர்கள் நீரின்றி காய்ந்து போவதால் அந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. கர்நாடக அணைகளில் தமிழகத்துக்கு வழங்கக்கூடிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. அப்படியிருந்தும் தமிழகத்துக்கான தண்ணீரை வழங்க மறுப்பது நியாயமல்ல.

செவிசாய்க்க மறுக்கிறது

பயிர்கள் அனைத்தும் காய்ந்து போகின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தும் கர்நாடக அரசு செவிசாய்க்க மறுக்கிறது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் அறிவுரைகளையும் ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடக மாநிலத்தில் வாழ்கிறார்கள்.

அதேபோன்று ஆயிரக்கணக்கான கன்னடர்கள் தமிழகத்தில் வசிக்கிறார்கள். தினம்தோறும் போக்குவரத்து இருக்கிறது. அண்டை மாநிலம் என்பதால் இரு மாநிலங்களும் நட்பும் பாசத்துடன் இருந்தால் தான் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழும் போது அச்சமின்றி வாழ முடியும்.

தேவையில்லாத ஒன்று

அதைவிடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு என யாரையும் மதிக்கமாட்டோம் என்பதும், தமிழக முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்கமாட்டோம் என்பது நியாயமற்றது.

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை தமிழ் நடிகர் என்று சொல்லி மேடையில் இருந்து இறக்கியது தேவையில்லாத ஒன்று. ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை சார்ந்து தான் இருக்கிறது. ஏதோ தனி நாட்டில் வாழ்வது போல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்