பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டும் போதாது... சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
|கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ரெயில்வே துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரெயில்வே துறை சார்பில் ஏற்கனவே தமிழகத்தில் 35 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 407 ரெயில் நிலையங்களில் 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக, திறமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்; மேலும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் ரெயில்வே துறைக்கு அறிவுறுத்தி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.