< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சூசக அழைப்பு
மாநில செய்திகள்

'அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம்' எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சூசக அழைப்பு

தினத்தந்தி
|
15 Jun 2024 4:45 AM IST

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல அதிரடி திருப்பங்களை கண்டது.

சென்னை,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற பெருந்தன்மையான முடிவு எடுங்கள் என்றும், அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல அதிரடி திருப்பங்களை கண்டது. பல்வேறு கட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தபோதிலும், அத்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். சாலையில் செல்பவர்கள் எல்லாம் குழு அமைத்தால் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டுமா? என்று காட்டமாகவே எடப்பாடி பழனிசாமி பதில் அளித்திருந்தார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற தோல்வியை சுட்டிக்காட்டி அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைவது அவசியம் என்று ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் குரல் எழுப்ப, அதற்கு அ.தி.மு.க. வில் இருந்து எந்தவொரு சலனமும் எழவில்லை, அவருக்கு யாரும் அ.தி.மு.க. தரப்பில் பதிலும் அளிக்கவில்லை.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து சூசகமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆரால், தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அ.தி.மு.க. என்னும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கிறது. இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா?.

இல்லை, ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத்தேர்தல் வெற்றியை, மீண்டும் நிலைநாட்டி அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற, ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.

எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சசிகலாவும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) போயஸ் கார்டனில் தான் புதியதாக குடியேறியுள்ள இல்லத்தில் அவர் தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்