< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமை; கணவர் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமை; கணவர் உள்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 3:30 AM IST

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காதல் திருமணம்

வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் சுவாதி (வயது 19). இவரும், பக்கத்து கிராமமான கூவக்காபட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (19) என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 பேரும் திண்டுக்கல்லில் தனியாக வசித்து வந்தனர். இதில், அவர் கர்ப்பமானார்.

இதற்கிடையே அஜித்குமார், சுவாதியை விட்டு பிரிந்து தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சுவாதி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கணவர் பிரிந்து சென்றது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் சுவாதி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 2 பேரையும் சேர்ந்து வாழ வலியுறுத்தினர். அதன்பிறகு அஜித்குமார், சுவாதியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

3 பேர் கைது

அங்கு சுவாதியை அஜித்குமார் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி, பாட்டி வெள்ளையம்மாள் ஆகியோர் சேர்ந்து சாதியை கூறி தாக்கியதுடன், கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் சுவாதியிடம் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கட்டாய கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுதவிர சுவாதி வைத்திருந்த ரூ.31 ஆயிரம் மற்றும் செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டு, கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று போலீஸ் நிலையத்தில் எழுதிக்கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சுவாதி, வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து, அஜித்குமார் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி, பாட்டி வெள்ளையம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் இதில் உடந்தையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராகேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்