சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என இபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி
|தங்கள் தோல்வியை மறைப்பதற்காக பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையின் 3ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இன்றும் அ.தி.மு.க.வினர் விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து சட்டசபையை முடக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் . அ.தி.மு.க.வினர் சட்டசபையில் அமளியில் ஈடுபடுகின்றனர்.
அமளியில் ஈடுபட்டாலும் அவையில் தொடர்ந்து பங்கேற்க அ.தி.மு.க.வினருக்கு முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முதல்-அமைச்சர் பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றார்.
தங்கள் தோல்வியை மறைக்க பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மக்கள் புறக்கணித்ததால் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என காத்திருக்கின்றனர். தி.மு.க. அரசு வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை."
இவ்வாறு அவர் கூறினார்.