புதுக்கோட்டை
சாமானிய மக்கள், வணிகர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது
|கடந்த ஓராண்டில் 2 முறை மின் கட்டணம் உயர்ந்ததால் சாமானிய மக்கள், வணிகர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது என்ற விக்கிரமராஜா கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் ரூ.60 வீதம் 2 மாதங்களுக்கு ரூ.120 வாடகையை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 2 முறை மின் கட்டணத்தை உயர்த்தி சாமானிய மக்கள், வணிகர்கள் போன்றோருக்கு பெரும் சுமையை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. துறையில் அமலாக்கத்துறையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28 சதவீத வரியை குறைக்க வலியுறுத்தியும் தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வணிக நிர்வாகிகள் மத்திய நிதி மந்திரியை செப்டம்பர் 5-ந் தேதி சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சாமானிய வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகளை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வருவதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனை விடுத்து வணிகர்கள் மீது வழக்கு போடுவது நியாயமற்றது. அறந்தாங்கி, திருவாரூர் வழியாக காரைக்குடி வரை தினசரி ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வேயை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஆவுடையார்கோவிலில் விக்கிரமராஜா வர்த்தக சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.