அதிமுகவை மறந்து 1 வருடம் ஆகிறது - அண்ணாமலை பேட்டி
|கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை,
சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதல்-அமைச்சராக வருவதற்கான சூழல் உள்ளது என நான் நினைக்கிறேன்; இது கக்கன் ஐயா வாழ்ந்த பூமி, நல்லவர்களுக்கு இடம் கிடைக்கும். விசிக தலைவர் திருமாவளவன் கூடுதலாக சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசியுள்ளார்.
கூட்டணி வேண்டும், வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு இன்னமும் ஒரு பயம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அதிமுக என்ற கட்சியை நான் மறந்து ஒரு வருடம் ஆகிறது. எங்கள் வேலையை பார்த்து நாங்கள் செல்கிறோம்.
சென்னையில் நடைபெறும் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்கிறேன். நாணய விழாவில் பங்கேற்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் என்னை அழைத்துள்ளார். கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரீகத்துடன் பாஜக பங்கேற்கிறது. கவர்னரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.