தூத்துக்குடி
தூத்துக்குடியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த கலை இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா
|தூத்துக்குடியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த கலை இலக்கிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்.
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்.
கலை இலக்கிய போட்டி
வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் வன உயரின வார விழா கொண்டாடப்படுகிது. விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சு, விநாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டிகள் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 450 மாணவ, மாணவிகள கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழா
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினர். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் பிருந்தா, சுப்பிரமணியன், பாரதி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.