'சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|இந்தியாவை மாற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டுள்ள நாட்டின் பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என குறிப்பிடப்பட்டு இருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் பெயரை 'பார்த்' என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, அதை 'பாரத்' என மாற்றிவிட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், "சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை ஒழிப்பது குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன்? சனாதனம் பற்றி பேசிய அண்ணா பெயரில் உள்ள கட்சியான அ.தி.மு.க.வின் கருத்தை நான் அறிய விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.