திருவாரூர்
விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழை
|திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 62 மி.மீட்டர் மழை பதிவானது.
திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 62 மி.மீட்டர் மழை பதிவானது.
விடிய, விடிய கொட்டித்தீர்த்தது
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் திருவாரூர், தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் திருவாரூரில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. பின்னர் இரவு 11 மணிக்கு தொடங்கிய கன மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.இந்த பலத்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 62 மி.மீட்டர் மழை பதிவானது.
குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
இதேபோல கூத்தாநல்லூர் பகுதியில் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் அடித்தது. இருப்பினும் அவ்வப்போது வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
இதனையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் வானம் இருள்சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.
தொற்று நோய் பரவும் அபாயம்
கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரில் கொசுகள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பகுதியில் மழை காலம் முடியும் வரை காலை, மாலை நேரங்களில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை அளவு
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- திருத்துறைப்பூண்டி-62, முத்துப்பேட்டை-52, திருவாரூர்-33, மன்னார்குடி-30, பாண்டவயாறு தலைப்பு-7, நீடாமங்கலம்-2.