"முறைப்படி டெண்டர் அறிவிப்புகளை வெளியிடுங்கள்" - அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|முறைப்படி டெண்டர் அறிவிப்பு வெளியிட வேண்டுமென்று வழக்கில் ஆஜரான அதிகாரிக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர்,
முறைப்படி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு பணிகள் நடத்த வேண்டுமென்று வழக்கில் ஆஜரான வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.சாமிநாதன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், முறைப்படி வெளிப்படையாக டெண்டர் அறிவிப்பு வெளியிடாமல் நடைபெறும் பண்டாரவாடை பஞ்சாயத்தில் பேருந்து நிழற்குடை கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் டெண்டர் வழங்கப்படுவதற்கு முன்னதாக ஏதேனும் பொது அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று கூறினார். பின்னர் பண்டாரவாடை பஞ்சாயத்தில் பேருந்து நிழற்குடை கட்டும் பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். முறைப்படி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு அதனடிப்படையில் பணிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இனிவரும் காலங்களில் முறைப்படி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு பணிகள் நடத்த வேண்டுமென்று வழக்கில் ஆஜரான வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அறிவுறுத்தி நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.