செயற்கைக்கோள்களுடன் 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது - விஞ்ஞானிகள் தகவல்
|'இந்திய செயற்கைக்கோள்களுடன் விண்வெளி கழிவுகள் கடந்த ஆண்டு 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.
சென்னை,
விண்வெளிக்கழிவுகள் (ஸ்பேஸ் டெப்ரிஸ்) என்பன பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகளாகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியில் இருந்து விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளின் பாகங்களாகும்.
அத்துடன், பழைய செயலிழந்த மற்றும் கைவிடப்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றில் இருந்து கழன்ற பாகங்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளாக உள்ளன. இவை அனைத்தும் அதி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன.
பூமியில் உள்ள பெரும் பிரச்சினைகளில் ஒன்று குப்பைகள். இது விண்வெளியிலும் பிரச்சினையாகதான் இருக்கிறது. ராக்கெட் பாகங்கள் பல இப்போது நமக்கு பல சேவைகளை வழங்க உதவியாக இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.
அந்தவகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி- சி-58 ராக்கெட் மூலம் 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 'பி.எஸ்.எல்.வி. ஆர்பிட்டல் எக்ஸ்பரீமென்டல் மாட்யூல்-3' (பி.ஓ.இ.எம்.-3) என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு திட்டம் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையானது விண்வெளியில், 650 கிலோ மீட்டர் முதல் 350 கிலோமீட்டர் வரையிலான சுற்றுப்பாதையில் நடத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் துளி அளவு கூட விண்வெளியில் எந்த பாகத்தையும் மிதக்கவிடாமல் வெற்றிகரமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்தது. இதனால் சுற்றுப்பாதையில் குப்பைகளை விடுவது, முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தற்போது 2023-ம் ஆண்டிற்கான இஸ்ரோ ஆண்டு இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை (இஸ்ஸார்) வெளியிட்டுள்ளது. அதில், விண்வெளி பொருட்களின் தொடர்ச்சியான வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 212 ஏவுதல்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு 3 ஆயிரத்து 143 புதிய பொருட்கள் விண்ணில் சேர்ந்துள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டில் 179 ஏவுதல்களில் இருந்து 2 ஆயிரத்து 533 பொருட்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
இந்த அதிகரித்து வரும் நெரிசல், குப்பைகளுடன் சாத்தியமான மோதல்களால் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு நம்முடைய செயற்கைக்கோள்கள் மீது விண்வெளி கழிவுகளால் 23 மோதல்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. அத்துடன் அமெரிக்காவின் விண்வெளி உத்தரவு அமைப்பிடம் இருந்து 1 லட்சத்து 37 ஆயிரத்து 565 அறிவுறுத்தல்களை இஸ்ரோ பெற்றது. அதில் சுமார் 3 ஆயிரத்து 33 அறிவுறுத்தல்கள் ஒன்றுக்கொன்று 1 கிலோ மீட்டர் தொலைவில் வரும் செயற்கைகோள்களை உள்ளடக்கியது. இந்த அடிக்கடி நெருக்கமான சந்திப்புகள் இருந்தபோதிலும். துரித நடவடிக்கைகளால் மோதல்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.